Monday, January 3, 2011

2011 - காடுகளின் ஆண்டு

          இந்த புத்தாண்டில் உலகம் பசுமையாக, வளமாக, செழிப்பாக இருக்கும் என்று நம்பலாம். ஏனெனில், சர்வதேச காடுகள் ஆண்டாக 2011ஐ ஐக்கிய நாடுகள் சபை பிரகடனம் செய்திருக்கிறது. அத்துடன் புத்தாண்டுக்கு பல விசேஷங்கள் இருக்கின்றன. இது 3வது மில்லியனியத்தில் 21வது நூற்றாண்டின் 2வது பத்தாண்டுகளின் தொடக்கம். கொஞ்சம் தலை சுற்றுவது போலத் தெரிந்தாலும், அது விசேஷம்தான். 

9ம் எண்ணுக்கு பிறகு வருவதை இரட்டை இலக்கம் என்கிறோம். அதுபோல, 2000ம் ஆண்டு தொடங்கியதுமே 21வது நூற்றாண்டு என்று அழைக்கிறோம். அந்த வரிசையில் 2000ல் 10 ஆண்டுகள் முடிந்து 2வது பத்தாண்டுகளின் தொடக்கம் 2011 என்பதால் அதற்கு சிறப்பு இருப்பதாக எண்ணியல் வல்லுனர்கள் (நியூமராலஜிஸ்ட்) தெரிவிக்கின்றனர்.

இயற்கை விஷயத்தில் இந்த ஆண்டு வித்தியாசமானதாக இருக்குமாம். சூரியனில் கரும்புள்ளிகள் அதிகரித்து வருவதால், அதன் வெப்பக் கதிர்களின் வேகம் சற்று தணியும். அதனால், பனிப் பொழிவுகள், மழை அளவு அதிகரிக்கும். அதற்கேற்ப காடுகள் ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளதால், உலக நாடுகள் அனைத்தும் தங்கள் வனப் பகுதிகளின் பரப்பை அதிகரிக்க திட்டமிட்டுள்ளன. இதனாலும், வெப்பத்தின் தாக்கம் குறையக் கூடும்.

பூமி வெப்பமயமாவதாக காது வலிக்க சத்தம் கேட்பது இந்த ஆண்டில் கொஞ்சம் குறைய வாய்ப்பிருப்பதாக புவியியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அடுத்ததாக, 2011ம் ஆண்டை சர்வதேச ரசாயன ஆண்டாகவும் ஐ.நா. அறிவித்திருக்கிறது. காடுகள் ஆண்டுக்காக வனப்பகுதிகளை அதிகரிக்கும் அதேநேரத்தில், பூமியை பாதுகாக்க ரசாயனங்களின் பயன்பாட்டை குறைப்பதே இதன் நோக்கம்.

முக்கிய நிகழ்வுகள்

 ஜனவரி 4 - சூரிய கிரகணம், ஐரோப்பா, அரேபியா, வடஆப்ரிக்கா, மேற்கு ஆசியா மட்டும் (இந்தியாவில் தெரியாது).

 பிப்ரவரி 19 - உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா தொடங்குகிறது. இந்தியா, இலங்கை, வங்கதேசத்தில் நடக்கிறது.

 ஏப்ரல் 1 - ஸ்பேஸ் ஷட்டில் விண்கலம் தனது ஓய்வுக்கு முன்பு கடைசியாக விண்வெளி பயணம் மேற்கொள்கிறது.

 ஏப்ரல் 29 - பாகிஸ்தான் முதலாவது விண்கலத்தை ஏவப் போகிறது.

 ஜூன் 1 - சூரிய கிரகணம், ஆர்ட்டிக் கடல் பகுதிக்கு மட்டும்.

 ஜூன் 15 - முழு சந்திர கிரகணம், இந்தியாவில் முழுமையாக தெரியும். ஆப்ரிக்கா, மத்திய கிழக்கிலும் பார்க்கலாம்.

 ஜூலை 1 - சூரிய கிரகணம், அண்டார்டிகா கண்டத்துக்கு மட்டும்.

 நவம்பர் 25 - சூரிய கிரகணம், அண்டார்டிகாவுக்கு மட்டும்.

 டிசம்பர் 10 - முழு சூரிய கிரகணம், இந்தியாவில் தெரியும். ஆசியா, ஆஸ்திரேலியா, அலாஸ்கா பகுதிகளிலும் பார்க்கலாம்.

 டிசம்பர் 31 - அனைத்து அமெரிக்க படைகளும் ஈராக்கை விட்டு வெளியேற குறிக்கப்பட்டுள்ள நாள்.

என்ன காலண்டர்

2011
என்பது கிரகோரியன் காலண்டர். மற்ற நாடுகளுக்கென தனித்தனி நம்பர்கள் இருக்கவே செய்கின்றன. அந்த வகையில் அமெரிக்காவுக்கு இது 1460ம் ஆண்டு. வங்காளத்தில் 1418. புத்தமதத்தில் 2555. மற்றவை வருமாறு:

 சீனா 4647
 ஈரான் 1389
 இஸ்லாம் 1432
 ஜப்பான் ஹெய்சி 23
 கொரியா 4344
 தாய்லாந்து 2554
 இந்து மதத்தில் கலியுக ஆண்டு 5112.

சந்தோஷம் உங்களை தேடி வர...

புத்தாண்டில் ஒவ்வொருவரும் கட்டாயம் ஒரு தீர்மானம் எடுத்து கொள்ள வேண்டும். குழந்தைகளையும் இதற்கு உட்படுத்த வேண்டும். அப்போது தான் வளர வளர அவர்களுக்குள் சாதிக்கும் மனப்பான்மையும், தங்களுக்குள் எப்போதும் ஒரு கட்டுப்பாடுடன் வளர்வார்கள்.

இதோ உங்களுக்கான சில டிப்ஸ்கள்...

எடை குறைக்க...
அதிக உடல் பருமன் இருப்பவர்கள் குறைக்க தீர்மானம் எடுங்கள். இதுதான் இந்த புத்தாண்டின் முக்கிய குறிக்கோளாக எடுத்து கொள்ளுங்கள். தினமும் உடல் பயிற்சியில் ஈடுபடுங்கள். மதிய உணவிற்கு பின் அலுவலகத்தில் சிறிது நடந்து பயிற்சி பெறுங்கள். லிப்ட் பயன்படுத்தாமல், படிகட்டுகளை பயன்படுத்தவும். வீட்டில் இருப்பவர்களாக இருந்தால், வாக்கிங், யோகா மற்றும் உடல் பயிற்சிகளில் ஈடுபடலாம்.

கடனில் இருந்து மீள...
வீடு, டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், கார், பைக் என கடனில் நீங்கள் வாங்கிய பொருட்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்லலாம். கடனுக்கு வாங்கியிருந்தால், இந்த புத்தாண்டில் எப்படி இவற்றை அடைக்கலாம் என்று முன்பே யோசியுங்கள். கடன் சுமை குறைப்பது தான் புத்திசாலிதனம். எந்த கடனாக இருந்தாலும், வட்டியுடன் சேர்த்து பார்த்தால், ஆ... என்று வாய் பிளக்க வைக்கும். ஆதலால், மாத தவணை செலுத்திய பின்னரும், சிறிது, சிறிதாக மாத வருமானத்தில் மிச்சம் வைத்து கடன் சுமையை குறைக்க பாருங்கள்.

சரியான நேரத்தில் இருக்கையில்...
பள்ளிக்கு, கல்லூரிக்கு, பணிக்கு செல்பவர்கள் யாராக இருந்தாலும், உரிய நேரத்தில் இருக்கையில் இருக்க வேண்டும். இது கண்டிப்பான ஒழுக்க பாடத்தை உங்களுக்கு கற்பிக்கும். வழக்கத்திற்கு மாறாக அரை மணி நேரத்திற்கு முன்பாக எழுந்து, கடமைகளை முடித்து கிளம்பினால் போதும். வீட்டை வீட்டு அட்வான்சாக 10 நிமிடம் முன்பே கிளம்பி விடுங்கள். அப்போது தான் டிராபிக் ஜாமில் மாட்டாமல், யாரிடமும் திட்டு வாங்காமல் நிம்மதியாக அலுவலகத்திற்கு செல்லலாம். 

பணம் சேமிப்பு...
பண சேமிப்பு முக்கியம். புத்தாண்டு துவக்கத்தில் சேமிப்பு திட்டத்தை முடிவு செய்யுங்கள். அதற்கு தகுந்தது போல் ஒவ்வொரு மாதமும் பணத்தை சேமியுங்கள். இந்த சேமிப்பு தங்கத்தில், பங்கு சந்தையில், தபால் அலுவலகத்தில், வங்கியில் என பாதுகாப்பாக இருக்கட்டும்.

குடும்பத்தினருடன் அதிக நேரம்...
குடும்பத்தில் தம்பதிகள் இருவரும் வேலைக்கு செல்லும் பட்சத்தில் குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவழிக்க முடியாது. பாசத்திற்கு ஏங்கும் குழந்தையை கூட மடியில் வைத்து கொஞ்ச முடியாது. கண்டிப்பாக, கட்டாயமாக குழந்தை இதற்காக ஏங்கும். கொஞ்ச நேரம் மடியில் வைத்து கொஞ்சுங்கள். அன்று பள்ளியில் ஆசிரியர், நண்பர்கள் என்ன சொன்னார்கள், சமத்தாக சாப்பிட்டயா? அம்மா செய்த சாதம் நன்றாக இருந்ததா? என்று அவர்களுடன் உரையாடுங்கள். 
குழந்தைகளை தூங்க வைக்கும் போது கற்பனைக்கு வந்த குட்டி, குட்டி நீதி கதைகளை கட்டாயம் சொல்லுங்கள். இது குழந்தையின் வளர்ப்பில் நல்ல மாற்றத்தை கொண்டு வரும். வாரத்தின் இறுதி நாளை குழந்தையுடன் விளையாட, குடும்பத்துடன் செலவழிக்க கட்டாயம் ஒதுக்குங்கள். குழந்தையின் தேவையை அறிந்து பூர்த்தி செய்யுங்கள். இல்லையென்றால் குழந்தை மன ரீதியில் பாதிக்கப்படும். பிள்ளைகள் பெரியவர்களாக இருந்தால், அவர்களுடன் சேர்ந்து குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் மூன்று வேளையில் ஏதாவது ஒரு வேளையில் சேர்ந்து சாப்பிடுங்கள். மனம்விட்டு பேசுங்கள். அப்போது தான் குடும்பத்தில் உள்ளவர்கள் ஒவ்வொருவரின் மனதை புரிந்து கொள்ள முடியும். பிரச்னைகள் இருந்தால் அது தானாக விலகும். மகிழ்ச்சி தானாக வீட்டில் குடியேறும்.  

சுற்றுலா செல்ல...
எப்போது பார்த்தாலும், வேலை, டென்ஷன். சின்ன சின்ன விஷயங்களுக்கும் வீடே அலறும். எதற்கு இதெல்லாம். நம் சந்தோஷத்திற்கு, நம்முடைய குடும்ப சந்தோஷத்திற்கு தானே உழைக்கிறோம். அதையும் அன்புடன், அறிவுபூர்வமாக செய்யுங்கள். நிம்மதி கிடைக்கும். டென்ஷனை விட்டொழிக்க அனைத்தையும் மறந்து வருடத்தில் 4 முறை அல்லது 2 முறை என்று உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு சுற்றுலா அமைத்து கொள்ளுங்கள். முழுநேரத்தையும் குடும்பத்துடன் செலவழியுங்கள். பணத்தை பார்க்காதீர்கள். இதற்காக ஆரம்பத்தில் இருந்தே சிறிது தொகையை ஒதுக்கி வாருங்கள். அப்புறம் என்ன சந்தோஷம் உங்களை தேடி வரும்...

பிளாஸ்டிக்கிற்கு குட்பை...
சமுதாயத்திற்கு சீர்கேடாக இருக்கும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை நிறுத்துங்கள். கடைக்கு செல்லும் போது கையில் துணி பை அல்லது சணலால் தயாரித்து வரும் பைகளை எடுத்து செல்லுங்கள்.

புத்தாண்டில் உங்களுக்கு...

 எப்போதும் முக மலர்ச்சியுடன் இருங்கள்.

 கடுஞ்சொற்கள் வேண்டாம்.

 அன்பை வெளிப்படுத்துங்கள்.

 ஒரு சிறு விஷயத்திற்கும் பிரதிபலன் பார்க்காமல் நன்றி சொல்லி பழகுங்கள்.

 கோபம், பொறாமை வேண்டாம், ஆரோக்கியமான போட்டி இருக்கட்டும்.

 எதையும் திட்டமிட்டு செய்யுங்கள்.

 அவசியத்திற்கு மட்டும் செலவழிக்கவும்.

 உங்கள் குழந்தைகளின் எண்ணங்களுக்கு மதிப்பு கொடுத்து கேளுங்கள். 

 முதியவர்களின் ஆரோக்கியத்தில், முதுமையில் அக்கறை எடுத்து கொள்ளுங்கள். அவர்களது தேவையை முடிந்த வரை பூர்த்தி செய்யலாம்.

2011 புத்தாண்டு உங்களை இருகரம் கொண்டு வரவேற்கட்டும். ஒவ்வொரு இல்லங்களிலும் மகிழ்ச்சி துள்ளட்டும்... வாழ்த்துக்கள்.

No comments: