Tuesday, February 8, 2011

இறைவன் நாராயணனே பயந்த நேரம்!!?


இறைவன் நாராயணனே பயந்த நேரம்.

ஏன் பயந்தான் நாராயணன்?

பக்திக்கு மிகச்சிறந்த உதாரணம் ப்ரஹலாதன். ப்ரஹலாதன் மட்டுமல்ல இரணியனும் பக்திக்கு மிகச் சிறந்த உதாரணம். எப்படி என்று பார்ப்போம்.
கருவிலேயே நாராயண நாமம் மனதில் பதிக்கப்பட்டவன் ப்ரஹலாதன். எவ்வளவு வயதாகியும் இன்னமும் நாராயணனை ஒரு நாளைக்கு ஒரு முறையாவது நினைக்க முடியவில்லை நம்மால். பிறந்த்து முதல் நாராயண நாமம் சொல்லி அதனால் எவ்வளவு துன்பம் வரினும் அனைத்திலுமே அவன் நம்மை அளித்துக் காப்பான், அவனன்றி தெய்வம் வேறு இல்லை என்னும் ஞானம் கைவரப் பெற்றவன் ப்ரஹலாதன். அந்த ஆத்ம ஞானம் நமக்கெல்லாம் கிட்டுமா? செய்யக் கூடாத செயலையெல்லாம் செய்துவிட்டு பின்னர் நாராயணனால் ஆட்கொள்ளப்பட்டு அதன் பின்னாலே ஆழ்வார்களானோர் பலர். ஆழ்வார்களை நாராயணன் ஆட்கொண்டான், ஆனால் ப்ரஹலாதன் நாராயணனை ஆட்கொண்டான். ஆமாம் ப்ரஹலாதனுக்கு அருளினாற்போல பாக்கியம் வேறு யாருக்குக் கிடைக்கும்.
இரணியன் என்னும் அசுரன் ப்ரும்மாவை நோக்கித் தவமிருந்தான். ப்ரும்மாவும் காட்சி தந்தார். இரணியன் வரம் கேட்டான். தனக்கு மனிதர்களாலோ, மிருகங்களாலோ, பறவைகளாலோ, இரவிலோ, பகலிலோ வீட்டிற்கு உள்ளேயோ, வெளியெயோ மரணம் சம்பவிக்க்க் கூடாது என்று மிக புத்திசாலித்தனமாக வரம் கேட்டான். ப்ரும்மாவும் அளித்தார்.
நம்மிடம் ஒரு சக்தி கிடைத்தால் அந்த சக்தியை வைத்துக்கொண்டு நல்லது செய்ய வேண்டும் என்னும் எண்ணம் கொண்டவர்கள் மகான்கள். கிடைத்த சக்தியை வைத்துக்கொண்டு அராஜகம் புரிய ஆரம்பித்தான் இரணியன், அசுரனல்லவா?
அவனை அடக்க யாராலும் முடியவில்லை. அப்படிப்பட்ட அசுரனை வதம் செய்ய நாராயணன் முடிவெடுத்தான். நல்லவர்களை, தர்மவான்களைக் காக்க, தர்மத்தை நிலைநாட்ட ஒவ்வொரு காலத்தில் ஒவ்வ்ரு அவதாரம் எடுத்த நாராயணன் யோசித்தான் இந்த அசுரன் இரணியனை எவ்வாறு அழிப்பது, என்ன அவதாரம் எடுப்பது என்று. அசுரன் ஆனாலும் அவனுக்கும் புத்திர பாசம் உண்டல்லவா? அதனால் தன்மேல் பக்தி கொண்ட ஒரு புண்ணியாத்மா ப்ரஹலாதன், அவனை அந்த அசுரனுக்கு மகனாகப் பிறக்க வைத்து, அந்தப் பிள்ளை வாயிலாக தன் நாமம் சொல்லச் சொல்லி இரணியனைக் கோபமூட்டினான் நாராயணன்.
பிள்ளைமேல் பாசம் கொண்டவன் ஆனாலும் உலகத்திலுள்ள அனைவரும் ஓம் நமோ இரண்யாய நமஹ என்று சொல்லும் போது தன்னை அவமதித்து ஓம் நமோ நாராயணாய நமஹ: என்று சொல்லும் பிள்ளையை ஒழித்தால்தான் தன் மானம் காக்கப்படும் என்று நினைத்து இரணியனும் ப்ரஹலாதனிடம் தன்னுடைய விரோதியின் பெயரைச் சொல்ல வேண்டாம் என்று மன்றாடிக் கேட்டுக்கொண்டான். ஆனால் ப்ரஹலாதன் இரணிய நாமம் சொல்ல மறுத்து நாராயண நாமம் சொல்லி, தந்தைக்கே உபதேசம் செய்ய ஆரம்பித்தான். நாராயணனே தெய்வம் என்றான். ஆகவே கடுங்கோபம் கொண்ட இரணியன் ப்ரஹலாதனைக் கொன்று விடும்படி உத்தரவிட்டான். ப்ரஹ்லாதனைக் கொல்லப் பல வழி முறைகளைக் கையாண்டான். ஒவ்வொரு முறையும் தன் பக்தன் ப்ரஹலாதனை நாராயணன் காப்பாற்றினான்.
வெறுத்துப் போன இரணியன் ப்ரஹலாதனிடம், "எங்கே இருக்கிறான் உன்னுடைய நாராயணன்? காட்டு அவனை, என் சக்தியால் அழித்துவிடுகிறேன்" என்று கேட்டான். ப்ரஹலாதன் அப்போதும், "தந்தையே, அவரை அழிக்க உம்மால் முடியாது. அவரே பரம் பொருள், உம்மையும் என்னையும் இந்த ப்ரபஞ்சத்தையும் படைத்து காப்பவர் அவரே" என்றான்.
"எங்கே உன் நாராயணன்? காட்டு, எங்கிருக்கிறான் அவன்?" என்று ஆவேசத்துடன் கூக்குரலிட்டான் இரணியன்.
எப்போதுமே தன் பக்தர்கள் வாக்கை காப்பாற்ற வேண்டும் என்று நினைப்பவன் நாராயணன்.
அங்கே இரணியனுக்கும் ப்ரஹலாதனுக்கும் சம்பாஷணை நடந்து கொண்டிருக்கிறது.
இரணியன் கேட்கிறார், எங்கே உன் நாராயணன் என்று. அதற்கு என்ன பதில் கூறலாம் எப்படிச் சொன்னால் இரணியனுக்குப் புரியும் என்று ப்ரஹலாதன் யோசித்துக் கொண்டிருக்கிறான்.
அந்த இடைப்பட்ட நேரத்தில் நாராயணனுக்கே பயம் வந்ததாம்.
பக்தன் ப்ரஹலாதன் எங்கே நாம் இருக்கிறோம் என்று சொல்வானோ அந்த இடத்திலே இரணியனுக்கு நாம் காட்சி கொடுக்க வேண்டுமே என்று பயந்தானாம்.
பக்தன் வாக்கைக் காப்பாற்ற வேண்டுமல்லவா?
"என் நாராயணன் தூணிலும் இருப்பான், துரும்பிலுமிருப்பான்" என்றான் ப்ரஹலாதன்.
"இந்த்த் தூணிலே இருப்பானா?" என்று ஒரு தூணைக் காட்டி இரணியன் கேட்க, "இருப்பான்" என்று ப்ரஹலாதன் பதில் சொல்ல, ஆவேசமாகி, தன்னுடைய கதாயுதத்தால் தூணை ஓங்கி அடித்தான், காலால் உதைத்தான். தூண் இரண்டாகப் பிளந்தது. இரணியன் கேட்ட வரத்தை யோசித்து அதற்கேற்றாற் போல மனிதனும் அற்று மிருகமும் அற்று நரசிம்மமாய், இரவும் அற்று பகலும் அற்று சந்தியா காலத்தில், உள்ளேயும் இல்லாமல் வெளியேயும் இல்லாமல் வாயிற்படியில் அமர்ந்து, பூமியில் இரணியனின் உடல் படாமல் தன் மடியில் கிடத்தி எந்தவித ஆயுதமும் இன்றி, தன் விரல்களில் உள்ள நகங்களாலேயே அவன் மார்பைப் பிளந்து, அவனுடைய குருதியை ஒரு சொட்டுக்கூடக் கீழே விடாமல் உறிஞ்ஜி அவனுடைய குடலைத் தனக்கே மாலையாக்கிக் கொண்டு இரணியனை ஆட்கொண்டார் நாராயணன்.
அது சரி, அப்போது தன் கைகளால் அவனுடைய இருதயத்தைத் தடவிக் கொடுத்தாராம் நாராயணன். என்ன காரணம் தெரியுமா? நாராயணன் மஹாலக்ஷ்மியுடன் தனித்திருக்க வாயிற்காவலர் இருவரிடமும் யாரையும் உள்ளே விடவேண்டாம் எனக் கூறி உள்ளே சென்றானாம். அப்போது முனிவர்கள் நேரிடையாக நாராயணனின் அந்தப் புறத்துக்குள்ளே செல்ல முயல, அவரைத் தடுத்தனர் வாயிற்காவலர்கள். வெகுண்ட முனிவர்கள் சாபமிட்டனர், அவர்களை பூலோகத்தில் போய்ப் பிறக்கும்படி. நாராயணனின் மேல் அளவில்லா பக்தி கொண்ட அவர்கள் வருந்த நாராயணனே அங்கு வந்து அவர்களிடம், கொடியவர்களாகப் பிறந்து, கெட்ட பெயர் வாங்கி, சீக்கிறம் தம்மை வந்தடையுமாறு பிறப்பு வேண்டுமா? அல்லது நல்லவர்களாகப் பிறந்து, பலகாலம் கழித்து தன்னை வந்தடையும் படியான பிறப்பு வேண்டுமா? என்று கேட்க அவர்கள் மிருவரும் கெட்ட பெயரெடுத்தாலும் பரவாயில்லை நாராயணனை வெகு காலம் பிரிந்திருக்க முடியாது, ஆகவே கொடியவனாகவே பிறந்து பாவங்கள் செய்தாலும் பரவாயில்லை, கெட்ட பெயர் எடுத்தாலும் பரவாயில்லை, சீக்கிரம் நாராயணனை வந்தடையுமாறு அசுரப் பிறப்பெடுக்க சம்மதித்த புண்ணீயவான்களிரு துவார பாலகர்கள் அவர்களில் ஒருவன் தான் இரணியன்.
ஆகவேதான் நாராயணன் தன்னை விட்டுப் பிரிந்து கெட்ட பெயர் வாங்கிய இரணியனின் இருதயத்தைத் தடவிக் கொடுத்தாராம் நரசிம்ம அவதாரத்தில். தீயவைகளை அழித்து நல்லவர்களைக் காக்கவே அவதாரங்கள் ஆனாலும் அவைகளில் பல் ரகசியங்கள் இருக்கின்றன. அதில் ஒரு ரகசியம் இரணியன் ப்ரஹலாதன் கதை.

ஸ்ரீ லக்ஷ்மீ நிருசிம்மனுக்கும் நைவேத்யம்பானகமும் நீர் மோரும் செய்து, துளசியை அதில் போட்டு தோஷம் நீக்கி ப்ரசாதமாக்கி அருந்வேண்டும்.

No comments: