Sunday, April 27, 2014

அரக்கர்களும் - தேவர்களும்

அரக்கர்களும் - தேவர்களும்
-----------------------------------------

அரக்கர்களுக்கு பெருத்த சந்தேகம் ஏற்பட்டது. இறைவன் தேவர்களுக்கு மட்டுமே நன்மை செய்வதாக எண்ணி அவர் மீது கடுங்கோபம் கொண்டார்கள். இறைவனிடம் சென்று வாக்குவாதம் செய்தார்கள். 

"தேவர்களிடம் மட்டுமே நீங்கள் அதிக அன்பு செலுத்துகிறீர்கள். எங்களை நீங்கள் கவனிப்பதே இல்லை, ஏன் இந்த முரண்பாடு" என்று சினம் கொண்டார்கள்.

அதற்கு இறைவன் "இருவருக்குமே சரிசமமாக தானே நீதி வழங்குகிறேன். ஏன் இந்த சந்தேகம் உங்களுக்கு" என்று கூறினார். அரக்கர்கள் இறைவனின் பேச்சை ஏற்றுக்கொள்வதாய் இல்லை.

தான் இருவரிடமே சரிசமமாக நடந்து கொள்வதை எடுத்துக் காட்ட ஒரு சோதனை செய்வதாக கூறினார். அதற்கு அரக்கர்களும், தேவர்களும் ஒப்புக் கொண்டனர். 

உடனே அனைவரின் கைகளிலும் "லட்டு" வரும்படி செய்தார். லட்டை கண்டதும் அனைவரின் நாக்கும் எச்சில் ஊறி சப்புகொட்டியது. அதை உண்ண முயற்சி செய்தபோது கை மடங்கவில்லை. உடனே இறைவன் "உங்கள் கைகள் மடங்காது, இதை நீங்கள் எப்படி சுவைக்கிரீர்கள் என்று பார்க்கலாம்" எனக் கூறி மறைந்தார்.

அரக்கர்கள் எவ்வளவு முயற்சி செய்தும் அவர்களது கைகள் மடங்கவில்லை. அவர்கள் தேவர்களை கண்டார்கள்.. தேவர்களின் கைகள் இருந்த லட்டுக்கள் காலியாகி அனைவருமே லட்டு சுவைப்பதைக் கண்டார்கள். உடனே அரக்கர்களின் சினம் தலைக்கேறியது. இந்த இறைவன் நம்மை மறுபடியும் ஏமாற்றிவிட்டார். மேலும் மேலும் தேவர்களுக்கே சாதகமாக நடந்து கொள்கிறார். பாருங்கள் இந்த தேவர்களுக்கு மட்டும் எப்படி கைகள் மடங்கின என்று கத்தினார்கள்.

உடனே அரக்கர்கள் தேவர்கள் மீது சினம் கொண்டு வினவினார்கள். "எப்படி உங்கள் கைகள் மட்டும் மடங்கும்படி செய்தான். அவன் கள்ளன், துரோகி, நயவஞ்சகன்." என்று வசைமாறிப் பொழிந்தார்கள். 

உடனே தேவர்கள் கூட்டத்தில் இருந்து ஒருவர், "எங்களுக்கும் கைகள் மடங்கவில்லை.. ஆனால் எனக்கு ஒரு தேவர் அவர் கைகளில் இருந்த லட்டை ஊட்டிவிட்டார். அவருக்கு நான் ஊட்டிவிட்டேன். இப்படி ஒருவருக்கொருவர் மாறி மாறி ஊட்டிவிட்டோம் என்றனர்.

அன்பில்லாத அரக்கர்கள் எப்போதுமே அடுத்தவர்களை பற்றி சிந்திப்பதில்லை, அன்பைப் பொழிவதில்லை, உதவிகள் செய்வதில்லை, சுயநலத்தை மட்டுமே கொள்கையாக கொண்டவர்கள். இவர்கள் எப்போதுமே சுகம் காண்பதில்லை. . தேவ குணம் கொண்டவர்களே எப்போதும் வெற்றி பெறுகிறார்கள்.

அரக்கர்களும் தேவர்களும் எதோ கண்ணுக்கு தெரியாத ஒரு கிரகத்தில் இருப்பதாக கற்பனை செய்துகொள்ள வேண்டாம். பூமியில் உலாவும் அனைத்து ஜீவராசிகளிடத்திலும் அரக்க குணமும், தேவ குணமும் இருக்கின்றது.

No comments: