Tuesday, May 26, 2015

தவம் எப்படி செய்ய வேண்டும்?

தவம் என்றால் மந்திர ஜபமல்ல! தவம் என்றால் பூஜை செய்வதோ யாகம் வளர்ப்பதோ அல்ல! தவம் என்றால் பிராணாயாமமோ வாசி யோகமோ இன்னபிற யோகங்களோ அல்ல! தவம் என்றால் உடலை வருத்தி செய்யும் எந்த செயலுமல்ல!
தவம் என்றால், நான் யார்? என அறிய உணர மெய்ஞ்ஞான சற்குருவிடம் ஞானதானம் பெற்று கேட்டதை உணர்ந்து அறிய சும்மா இருந்து செய்யும் பயிற்சியே! முயற்சியே!
இறைவன் நமது உடலில் கண்ணில் மணியில் மத்தியில் ஊசிமுனையளவு துவாரத்தின் உள்ளே ஊசிமுனையளவு ஒளியாக துலங்குகிறார்! ஊசிமுனையளவு துவாரத்தை மெல்லிய ஜவ்வு ஒன்று மூடியுள்ளது! இதைத்தான் வள்ளலார் திரை என்றார்!
இதுவே நமது மும்மலத்தால் ஆனது! மொத்தம் 7 நிலையாக 7 திரையாக சூட்சுமமாக விளங்குகிறது! உள்ளே இருக்குது ஜோதி! வடலூரில் சத்திய ஞானசபை ஜோதி தரிசனம் இந்த தத்துவ அமைப்பிலே தான் கட்டப்பட்டது! காட்டப்படுகிறது! "சத்திய ஞான சபையை என்னுள் கண்டனன் சன்மார்க்க சித்தியை நான் பெற்றுக் கொண்டனன்" என்று வள்ளல் பெருமான் கூறியதை கவனிக்கவும்!
குருதீட்சை பெற்று நம் கண்ணில் உணர்வு பெற்று அதை நினைந்து நினைந்து உணர்ந்து அதனால் ஏற்படும் நெகிழ்ச்சியில் திழைத்து திழைத்து சும்மா இருக்க இருக்க நம் கண்களில் கண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து கொட்டும் அருவியென!! இங்ஙனம் தவம் தொடர்ந்தால் பலவித அனுபவங்கள் நாம் பெறலாம்! நமது வள்ளல்பெருமான் ஞானசரியையில் கூறியபடி நாம் இங்ஙனம் தவம் செய்து வந்தால் பெறலாம் நல்ல வரமே! மரணமில்லா பெருவாழ்வே! பிறவாப்பெருநிலை! அருட்பெரும்ஜோதி இறைவனோடு அந்த பரமாத்மாவோடு பேரோளியோடு நாமும் ஒளியாகி இணையலாம்! ஐக்கியமாகலாம்! பேரின்பம் பெறலாம்!
இதுவே தவம்! இதனால் கிட்டுவதே ஞானம்! இன்றைய உலகில் ஏராளமான குருமார்கள் தோன்றி ஏராளமான பயிற்சிகளை சொல்லிக்கொடுக்கின்றனர். இவை எவையும் ஞானத்தை தராது! ஒரு சில பயிற்சிகளால் உடல்நலம் பெறலாம். ஒரு சில சித்துக்கள் கைக்கூடலாம் இதெல்லாம் ஒன்றும் ஞானம் இல்லை! ஞானம் தன்னை உணர்தலே!
"தவம் செய்வார்க்கு அவம் ஒரு நாளுமில்லை" ஔவையார் பிராட்டிதானே தானமும் தவமும் செய்ய சொன்னது! மனிதா தவம் செய்தால் உனக்கு ஒரு துன்பமும் கிடையாது என உறுதி கூறுகிறார்! ஞானதானம் குருவிடமிருந்து பெறு. நீ மற்றவர்க்கு ஞானதானம் செய். குரு மொழி தட்டாது தவம் செய் உன் பெரும்துன்பமான வினை கூட உன்னை பாதிக்காது!
தவம் செய்ய நாம் காட்டுக்கு போக வேண்டியதில்லை! குடும்பத்தை விட்டு ஓட வேண்டியதில்லை! காவி உடுத்து தாடி முடி வளர்த்து உருத்திராட்சம் அணிந்து உலகம் சுற்ற வேண்டியதில்லை! நமது உடலை வெறுத்து வருத்தாது துன்புருத்தாது இருக்க வேண்டும்! உணவை வெறுத்து இலை உணவாக வேண்டாம்! கடுமையான ஜப தாபங்கள் வேண்டாம்! சுருக்கமாக கூறுவதனால் ஒன்றும் செய்ய வேண்டாம்! சும்மா இருந்தாலே போதும்!
திருமணம் ஞானம் பெற ஒரு தடையல்ல! இப்போது எப்படி இருக்கின்றீர்களோ, என்ன செய்து கொண்டிருக்கின்றீர்களோ அப்படியே இருங்கள். இந்த தவத்தை மட்டும் விடாது தொடர்ந்து 30 நிமிடமோ ஒரு மணி நேரமோ செய்தால் போதுமானது! நீதி நேர்மை ஒழுக்கமே உங்கள் தவத்தை சிறப்பிக்கும்! வேஷம் போடாதீர்கள்! எந்த தீய பழக்கவழக்கமும் இல்லாது பார்த்துக் கொள்ளுங்கள்! குடும்ப பொறுப்பு உணர்ந்து உங்கள் கடமையை சரிவரச் செய்யுங்கள்! இறைவன் உங்களுள் இருக்கிறானல்லவா? வெளியே கோயில், குளங்களில், மலைகளில் தேடாதீர்!
அருளே வடிவான இறைவன் அரவணைத்து காப்பான்! எந்த ஆபத்தும் வராமல் தடுப்பான்! எந்த நிலையிலும் கைவிட மாட்டான்! தாயுமானவனாகி அரவணைத்து, தந்தையுமாகி பராமரித்து, குருவுமாகி நம்மை கண்காணித்து நானே நீ என்று அறிவித்து அடைவித்து அகங்குளிர்வித்து அன்போடு தன்னோடு சேர்த்துக் கொள்வான்.
தவம் செய்வோர் சுத்த சைவ உணவையே உட்கொள்ள வேண்டும். நல்லாரை காண்பது நமக்கு நன்மை பயக்கும்! நல்லார் உபதேசம் கேட்பது நமக்கு பல தெளிவுகள், பெற ஏதுவாகும்! நல்லோரை சார்ந்து அவரோடு செயல்படுதல் மேலும் மேலும் புண்ணியம் கிட்டிய வழியாகும்!
அதிகாலையில் பிரம்ம முஹூர்த்ததில் எழுந்து தவம்செய்தல் உத்தமம்! இந்த ஞான சாதனையை எப்பொழுதும் எந்த ஒரு இடத்திலிருந்தும் செய்யலாம்! ஆத்ம சாதகன் - தவம் செய்பவன் பட்டினி கிடக்கக்கூடாது. சிறிதளவாவது உணவு உட்கொள்ள வேண்டும். பிரச்சனைகளிலிருந்து விடுபடுவது உத்தமம். இனிய சொற்களையே அளந்து பேசு. பெசாதிருந்தும் பழகு!
இதுவா தவம் என எண்ணாதீர்கள்? கண்ணை விழித்துக் கொண்டு உணர்வை நிறுத்திக்கொண்டு சும்மா இருப்பது மட்டும் தவமல்ல! இதுபோன்று நம் அன்றாட வாழ்வில் நாம் செய்யும் ஒவ்வொன்றும் தவமாக வேண்டும்! நீதியாக நெறியாக ஒழுக்கமாக பண்போடு பக்தியோடு அன்போடு பணிவோடு தெளிவோடு நிதானமாக ஒவ்வொரு செயலிலும் பார்த்துக் பார்த்து செயல்பட வேண்டும்! அப்போதுதான் தவம் விரைவில் கைக்கூடும்! தவம் மட்டும் 1 மணிநேரம் செய்தால் போதாது? 24 மணி நேரமும் நம் ஒவ்வொரு சொல்லும் செயலும் தவத்தை பிரதிபலிபதாய் விளங்க வேண்டும் அப்படிப்பட்டவனே ஆத்மசாதகன்!
தவம் சித்திக்க வேண்டும் இறைவனோடு ஐக்கியமாக வேண்டும் நான் யார் என்பதை உணரவேண்டும் என்ற ஆன்ம பசியோடு நாம் இருக்கவேண்டும்! தவம் செய்வது நமக்காக! முதலில் இது சுயநலந்தான்! நாம் பலம் பெற்றாலே பலன் பெற்றாலே உலகுக்கு கொடுக்கமுடியும்! எனவே முதலில் நாம் பன்படவேண்டும். அதற்கு நாம் ஒரு நிலையடைவது வரைக்கும் எதிலும் சிக்காமல் தனித்திருத்தல் அவசியம்! தவம் செய்வது ஞானம் பெற! கண்ணை மூடிக்கொண்டு மனம்போன போக்கிலே போகாதே! போலிகளை கண்டு ஏமாறாதே. நன்றாக கண்ணை திறந்து பார்! எது சரி என சிந்தித்து சுருதி யுக்தி அனுபவம் அறிந்து விழித்திருப்பாயாக! விழிப்புணர்வுடன் இருப்பாயாக! கண்ணை திறந்தே தவம் செய்வாயாக!
விழித்திருந்து தியானியுங்கள் பரமபிதா நம்மோடு என்றே எல்லா ஞானியும் கூறுவர்! கண்ணை மூடினான் என்றால் செத்தான் என்றே பொருள். தூங்காது, மயங்காது விழிப்புணர்வுடன் இருப்பவனே மரணத்தை வெல்வான்! விழிப்புணர்வு என்றால், ஜாக்கிரதையாக என்றும் விழியில் புணர்வுடன் அதாவது கண்விழியினுள் உள்ள ஜோதியுடன் சேர்த்தல் என்று மெய்ப்பொருள் விளக்கம் கூறுவர்! நாம் செய்யும் தவம் விழியில்புணர்வு! ஞானம் பெற விழிப்புணர்வு மிக அவசியம்!
நாம் புராணங்களிலும் கதைகளிலும் ரிஷிகள் செய்த பலவித தவங்களை கேள்விப்பட்டிருக்கிறோம். அசுரர்கள் செய்த கொடும்தவம் பற்றியும் படித்திருக்கிறோம். இதையெல்லாம் பார்த்துதான் உலகில் பலருக்கும் அவ நம்பிக்கை பிறந்தது! அடடா! இந்த மாதிரியெல்லாம் நாம் தவம் செய்ய முடியாது! கடவுளை அடைய இப்படியெல்லாம் தவமா செய்ய வேண்டும் நம்மால் முடியாதப்பா! அதற்காக ஒரு ஜன்மம் எடுத்துதான் வர வேண்டும் என்று அலுத்துக் கொள்வர். இன்றும் இவ்வாறே எண்ணிலடன்காதவர்கள் இருக்கின்றனர்.
உலக மக்களே அவ நம்பிக்கை வேண்டாம்! உலகை உய்விக்க மெய்ஞானிகள் பலர் தொன்றியுள்ளளனர்! ஞான நூற்கள் பல தந்துள்ளனர்! கவலை வேண்டாம். காலம் செய்த கோலம் ஞானம் பலகாலமாக மறைக்கப்பட்டுவிட்டது? காரியவாதிகள் சூழ்ச்சி! ஞான சூரியன் திருவருட் பிரகாச வள்ளலார் பிறந்தார்! மடமை என்னும் கடைக்கண் காட்டினார் வள்ளலார்! ஞானம் துலங்க ஆரம்பித்தது! துளிர்விட ஆரம்பித்தது! வந்தார்! சொன்னார்! செய்தார்! வென்றார்! பெற்றார் ஒளியுடல்!! தான் பெற்ற ஞானத்தை மரணமில்லா பெருவாழ்வை சாகாக்கல்வியை எல்லோருக்கும் பறைசாற்றினார்! பயிற்றுவித்தார்! இன்றும் எங்கள் ஞான சற்குரு மூலம் பயிற்றுவித்துக் கொண்டும் இருக்கிறார்!! ஞானபாதைதான் மிக எளிதானது!
ஞானதானம் செய்து அதனால் கிட்டும் புண்ணியம் பலன் மேலோங்கி தவம் சித்தித்து ஞானம் பெற்று பேரின்பம் பெறுக! தானமும் தவமுமே ஞானம் பெற ஒரே வழி! ஞானதானமே ஞான சாதனையே நம்மை இறைவனிடம் சேர்ப்பிக்கும்.
குருவில்லா வித்தை பாழ்
குருவனடி பணிந்து கூடுவதல்லார்கு
அருவமாய் நிற்கும் சிவம்.
குருவை நாடி திருவடி அறிந்து உணர்ந்து இறைவனடி சேர்வோம்.
"அனைவரும் நடுக்கண்ணை தகுந்த ஆசாரியன் மூலம் திறக்கப் பெற்றுக் கொள்வது நலம். " இது வள்ளல் பெருமான் உபதேசம். கண்ணில் நடுவில் இருக்கும் மறைப்பை நீக்கிவிட குருவை நாடுக. தீட்சை பெருக. வள்ளலார் வழி காட்டுவார்.

No comments: