Thursday, December 16, 2010

எத்தனை விதமான ஏகாதசிகள்!

      விரதங்களில் தலைசிறந்தது ஏகாதசி விரதமே. இந்த விரத மகிமையினால் ஆகாதது ஒன்றுமே இல்லை.  ஆண்டிற்கு 25 ஏகாதசிகள் வருகின்றன. அந்த ஏகாதசிகளின் பெயர்களையும் அந்த விரதத்தால் ஏற்படும் பயன்களையும் அறிவோம்.

1. உற்பத்தி ஏகாதசி

மார்கழி மாத கிருஷ்ணபட்சத்தில் (தேய்பிறை) முரன் எனும் அசுரனை திருமால் அழித்த நாள் இது. இன்று விரதமிருந்தால் சகல சௌபாக் கியங்களும் கிட்டும்.

2. மோட்ச ஏகாதசி

இதை பெரிய ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி, முக்கோடி ஏகாதசி என்றும் அழைப்பர். இந்நாளில்தான் சகல வைணவ ஆலயங்களிலும் சொர்க்கவாசல் திறப்பர். இன்று பசுவிற்கு அகத்திக்கீரை அளிப்பது மகத்தான புண்ணியமாகக் கருதப்படுகிறது. மார்கழி மாத சுக்லபட்சத்தில் (வளர்பிறை) வரும் இந்த ஏகாதசி விரதம், மற்ற ஏகாதசி விரதங்களைக் காட்டிலும் மகத்தான நற்பலன்களை தரவல்லது.

3. ஸபலா ஏகாதசி

தைமாத கிருஷ்ணபட்சத்தில் வரும் இந்த ஏகாதசி விரதத்தை அனுஷ்டித்து உலும்பகன் எனும் ராஜகுமாரன் சகல பாவ நிவர்த்தி பெற்று வைகுண்ட பதவி அடைந்தான்.

4. புத்ரதா ஏகாதசி

தைமாத சுக்ல பட்சத்தில் வரும் இந்த ஏகாதசியன்று விரதத்தை கடைப்பிடிக்க, புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு அந்த பாக்கியம் கிட்டும். வாரிசு இல்லாத சுகேதுவான் எனும் மன்னன் சான்றோர் அறிவுரைப்படி இந்த ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடித்து சத்புத்திரனை அடைந்தான்.

5. ஷட்திலா ஏகாதசி

மாசி மாத கிருஷ்ணபட்சத்தில் வரும் இந்த ஏகாதசியன்று விரதம் இருந்தால் அன்னதானம் செய்த பலனை அடையலாம். தானங்கள் பல செய்து வந்த பெண்மணி ஒருத்தி மாறுவேடத்தில் வந்த இறைவனுக்கு நேரமாகிவிட்டதால் அன்னமளிக்க மறுத்தாள். அதனால் அவள் செல்வம் நீங்க சாபம் பெற்றாள். அதற்குப் பரிகாரமாக இந்த ஏகாதசி நாளில் தன் உறவினர்களிடம் அவர்கள் விரதமிருந்த பலனை தானமாகப் பெற்று, விரதம் மேற்கொண்டாள். அதனால் புண்ணியம் பெற்று அவள் நிலை மாறி முன் போல் செல்வ வளம் பெற்று தானங்கள் செய்தாள். 

6. ஜயா ஏகாதசி

மாசி மாத சுக்ல பட்சத்தில் இந்த ஏகாதசி வரும். தேவேந்திரனின் சாபத்திற்கு ஆளான மால்யவான் எனும் மன்னனும் அவன் மனைவி புஷ்பவந்தி எனும் தேவகன்னிகையும் பூமியில் பேய் உருக்கொண்டு அலைந்து அரச மரத்தடியில் பசியால் வருந்தி, அன்றைய ஏகாதசி இரவில் கண் விழித்திருந்த காரணத்தால் சாபவிமோசனம் பெற்ற தினம். இந்த விரதத்தால் பேய்களுக்கே நற்கதி கிட்டும் எனில், மானிடருக்கு கிடைக்கும் பேரருளைப் பற்றி சொல்லவா வேண்டும்? 

7. விஜயா ஏகாதசி 

பங்குனி மாத கிருஷ்ணபட்சத்தில் வரும் இந்த ஏகாதசி விரதத்தைத்தான் ராமச்சந்திரமூர்த்தி அன்னை சீதையை மீட்டு வர உபாயமாகக் கையாண்டார். இந்த யோசனையை அவருக்கு பக்தாப்யர் எனும் முனிவர் கூறினார். கோரிய பலன்களை தட்டாமல் தரும் இந்த ஏகாதசி விரதம்.

8. ஆமவதி ஏகாதசி

பங்குனி மாத சுக்லபட்சத்தில் இந்த ஏகாதசி திதி வரும். இன்று நெல்லி மரத்தடியில் கலசத்தில் பரசுராமரின் திருவுருவை வரைந்து முறைப்படி பூஜை செய்து நெல்லி மரத்தை வலம் வந்து வணங்குவது சிலர் வழக்கம். அதனால் ஆயிரம் பசுக்களை தானம் செய்த பலன் கிட்டும்.

9. பாபமோசனிகா ஏகாதசி

சித்திரை மாத கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி இது. மஞ்சுமதி எனும் தேவ கன்னிகையின் மேல் காமவசப்பட்ட உலோமேசர் எனும் முனிவரின் தவம் வீணானது. அதனால் சாபம் பெற்ற அந்த முனிவர் பேய் உருக்கொண்டார். அவர் இந்த ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடித்து பழைய நிலையை அடைந்தார். இந்த ஏகாதசி விரதம் பாவங்களை அழிக்கும்.

10. காமதா ஏகாதசி

சித்திரை மாத சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசி திதி இது. நாகராஜனின் சாபத்தால் அரக்கனாக மாறிய ஒரு கந்தர்வன் சாப விமோசனம் பெற அவன் மனைவி இந்த ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடித்து அதன் பயனால் கந்தர்வன் நலமடைந்தான். நினைத்ததை நிறைவேற்றித் தரும் ஏகாதசி விரதம் இது.

11. வருதித் ஏகாதசி

வைகாசி மாத கிருஷ்ணபட்சத்தில் வரும் ஏகாதசி. பிரம்மனின் ஐந்தாவது தலையைக் கொய்த ஈசன் அதனால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தை இந்த ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடித்துதான் தொலைத்தார். இன்று எந்த தானம் செய்தாலும் ஆயிரம் மடங்கு பலன்கள் கிட்டும். அனைத்து நலன்களும் விளையும்.

12. மோஹினி ஏகாதசி

வைகாசி மாதத்தில் வரும் சுக்லபட்ச ஏகாதசி. துஷ்டன் ஒருவன் கௌண்டின்ய முனிவர் கங்கையில் நீராடித் திரும்பும்போது அவர் தன் மீது நீர் தெளித்து தன் பாவத்தை நீக்குமாறு வேண்ட, அவர் கூறியபடியே இந்த ஏகாதசி விரதம் மேற்கொண்டு நற்கதி அடைந்தான். இதனால் பாவங்கள் நீங்கும். 

13. அபார ஏகாதசி

ஆனி மாத கிருஷ்ணபட்ச ஏகாதசி இது. இந்நாளில் விரதத்தை அனுஷ்டிப்பதால்  சிவராத்திரியன்று காசி விசுவநாதருக்கு பூஜை செய்த பலனும், மாசி மகத்தன்று கங்கையிலும், காவிரியிலும் நீராடிய பலனும் கிட்டும். மேலும் பிரம்மஹத்தி, குரு நிந்தனை, பொய்சாட்சி கூறிய பாவங்களும் அகலும்.

14. நிர்ஜலா ஏகாதசி

இந்த ஏகாதசியை அனுஷ்டித்தால் 24 ஏகாதசி விரதங்களையும் அனுஷ்டித்த பலன் கிட்டும் என பீமனுக்கு வேதவியாசர் கூறியுள்ளார். இன்று தண்ணீர் கூட அருந்தாமல் விரதம் இருக்க வேண்டும். ஆனி மாத சுக்லபட்ச ஏகாதசி விரதம் இது.

15. யோகிநீ ஏகாதசி

இது ஆடி மாத கிருஷ்ணபட்ச ஏகாதசி. குபேரனின் பணியாளனான ஹேமநாதன் பூஜைக்கு குறித்த நேரத்தில் மலர்களைத் தராததால் குஷ்டநோய் ஏற்பட குபேரனால் சாபம் இடப்பட்டான். அவன் மார்க்கண்டேய முனிவரின் அறிவுரைப்படி இந்த ஏகாதசி விரதம் இருந்து நோய் நீங்கப்பெற்றான், நோய்கள் நீக்கும் ஏகாதசியாக இது போற்றப்படுகிறது.

16. சயிநீ ஏகாதசி

ஆடி மாத சுக்ல பட்ச ஏகாதசி இது. மகாபலியை பாதாள லோகம் அனுப்பிய பின் திருமால் பாற்கடலில் பள்ளி கொண்ட தினம் இது. இன்று உபவாசம் இருக்கிறவர்களுக்கு தெய்வ சிந்தனைகள் மிகும்; இறையருள் பொங்கும்.

17. காமிகா ஏகாதசி

இது ஆவணிமாத கிருஷ்ண பட்ச ஏகாதசி. இன்று திருமாலை துளசியால் அர்ச்சிக்க, வைகுண்டலோகம் சித்திக்கும். நெய்தீபம் ஏற்றி, தீபதானம் செய்தால் விரும்பியதெல்லாம் அடையலாம். காமிகா எனில் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும் என பொருள்.

18. புத்ரஜா ஏகாதசி 

ஆவணிமாத சுக்ல பட்ச ஏகாதசி இது. ஹீஜித் எனும் மன்னன் தான் முன் ஜென்மத்தில் பசுவதை செய்த பாவத்தால் புத்ர பாக்யம் தடைபட, லோமேச முனிவரின் அறிவுரைப்படி இன்று விரதம் இருந்து சத்புத்ர பாக்யம் பெற்றான். புத்ரபாக்யம் அருளும் ஏகாதசி விரதம் இது.

19. அஜா ஏகாதசி

இது, புரட்டாசி மாத கிருஷ்ணபட்ச ஏகாதசி. எல்லாம் இழந்த ஹரிச்சந்திர மகாராஜா கௌதம முனிவரின் ஆசியுடன் இந்த ஏகாதசி விரதத்தை கடைப்பிடித்து இழந்த அனைத்தையும் பெற்றான். இந்த விரதம், இழந்த பொருட்களை மீட்டுத்தரும் சக்தி படைத்தது.

20. பத்மநாபா ஏகாதசி

புரட்டாசி மாத சுக்லபட்ச ஏகாதசி இது. சூரிய வம்ச மன்னன் ஒருவன் அரசாண்ட காலத்தில் பஞ்சம் ஏற்பட்டது. ஆங்கிரஸ முனிவரின் அறிவுரைப்படி அந்த மன்னன் இந்த ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடித்து பஞ்சம் நீங்கப் பெற்றான். இந்த ஏகாதசி விரதம் வளமான வாழ்வு தரும். 

21. இந்திரா ஏகாதசி

ஐப்பசி மாத கிருஷ்ணபட்ச ஏகாதசி, இந்திரா ஏகாதசியாக அழைக்கப்படுகிறது. இந்திரசேனன் எனும் மன்னனின் தந்தை நரகலோகத்தில் வருந்துவதாய் நாரதர் மூலம் அறிந்து இந்த ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடித்து தன் தந்தையை அங்கிருந்து விடுவித்தான். இந்த ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பவர்களின் பித்ருக்கள் நற்கதி அடைவர்.

22. பாபாங்குசா ஏகாதசி

ஐப்பசி மாத சுக்லபட்ச ஏகாதசி இது. பாபாங்குசா எனில் பாவங்களை அகற்றுதல் என்று பொருள். இந்த ஏகாதசி விரதம் கங்கை போன்ற புண்ணிய நதிகளில் நீராடிய பலனையும்  கயாவில் தானம் செய்த பலனையும் தந்து எம பயத்தைப் போக்கும்.

23. ரமா ஏகாதசி 

இது கார்த்திகை மாத கிருஷ்ணபட்ச ஏகாதசி. இந்த விரதத்தைத் தெரிந்தோ தெரியாமலோ கடைப்பிடிப்பவர்கள் வைகுண்ட பதவியை அடைவர். முசுகுந்த சக்ரவர்த்தி இந்த விரதத்தை அனுஷ்டித்து பேறு பல பெற்றார்.

24. பிரபோதின ஏகாதசி

கார்த்திகை மாத சுக்லபட்ச ஏகாதசி இது. பகவான் யோகநித்திரையிலிருந்து விழித்தெழும் நாள். இன்று துளசி தளங்களால் திருமாலை அர்ச்சிக்க, சகல நன்மைகளையும் அடையலாம்.

25. கமலா ஏகாதசி

ஒரு ஆண்டில் 24 ஏகாதசிகள்தான் வரும். அபூர்வமாக ஒரு சில ஆண்டுகளில் 25 ஏகாதசிகள் வரும். அந்த 25வது ஏகாதசிதான் கமலா ஏகாதசி. அந்தணன் ஒருவன் தீயவனான தன் மகனை வீட்டை விட்டுத் துரத்த அவன் சௌம்ய முனிவரின் அறிவுரைப்படி இந்த கமலா ஏகாதசியை அனுஷ்டித்து திருமகளின் அருளையும் நற்குணங்களையும் பெற்றான். அனுஷ்டிப்போர்க்கு செல்வ வளம் தரும் ஏகாதசி இது. மகத்தான பலன்கள் தரும் ஏகாதசி திதி தினங்களில் என்றென்று முடியுமோ அந்த ஏகாதசிகளில் விரதம் இருந்தால், திருமால் - திருமகள் திருவருளோடு, நற்பலன்கள் பலவும் பெறலாம்.

No comments: